அரசியல் உயர்பதவி.. ‘கங்குவா’ ஹீரோயின் திஷாவின் தந்தையிடம் ரூ. 25 லட்சம் மோசடி!
‘கங்குவா’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை திஷா பதானியின் தந்தையிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் நடிகை திஷா பதானியின் தந்தை ஜக்தீஷ் பதானிக்கு அரசியலில் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் நிலையில், மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நடிகை திஷா பதானியின் தந்தை ஜக்தீஷ் சிங் பதானி துணை காவல் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். உத்தரப் பிரதேசத்தின் பரோலி தொகுதியில் வசிக்கும் இவரை, சமீபத்தில் தொடர்பு கொண்ட ஷிவேந்திர பிரதாப் சிங் என்பவர், ஜக்தீஷுக்கு அரசியலில் உயர் பதவி வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைகள் கூறியுள்ளார். மேலும், அவரை தனது கூட்டாளிகளிடமும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் ஷிவேந்திர பிரதாப்.
இந்நிலையில், ஜக்தீஷுக்கு அரசியலில் அல்லது உயர்மட்ட அரசுப்பணி வாங்கித் தருவதாக ஷிவேந்திர பிரதாப் பொய்யான வாக்குறுதி அளித்து ஆசைக்காட்டியிருக்கிறார். இதற்காக அவர் ஜக்தீஷிடம் இருந்து ரொக்கமாக ரூ. 5 லட்சமும், ரூ. 20 லட்சத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகளிலும் பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பணம் செலுத்தி 3 மாதங்களாகியும் எவ்வித பதவியோ பதிலோ அளிக்காமல் இருந்ததால் தனது பதவி வேண்டும் என்று கூறி, தான் கொடுத்த பணத்தை ஜக்தீஷ் திரும்பி தரச் சொல்லி கேட்டுள்ளார்.

இருப்பினும், கண்டிப்பாக பதவி அளிக்கப்படும் என்று ஷிவேந்திராவும் அவரது கூட்டாளிகளும் சமாளித்துள்ளனர். பணத்தைத் தந்தால் மட்டும் போதும் என்று ஜக்தீஷ் ஷிவேந்திராவின் கூட்டாளிகளைத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், பணத்தையும் தர முடியாது.. பதவியும் கிடையாது என்று ஷிவேந்திரா மிரட்டத் தொடங்கியதாக தெரிகிறது.
இதனையடுத்து தன்னை மோசடி செய்து விட்டதாக ஷிவேந்திர பிரதாப் மீதும், அவரது கூட்டாளிகள் மீதும் ஜக்தீஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
