தவெக அரசுக்கு வெற்றி - உயர்நீதிமன்றத்தில் "வெற்றிப் பயணம்" திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

 
வெற்றிப் பயணம்

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் "வெற்றிப் பயணம்" (மகளிருக்கான இலவச பேருந்து பயணம்) திட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது தவெக அரசுக்குக் கிடைத்த முக்கியச் சட்டப்பூர்வ வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

வெற்றிப் பயணம் மகளிர் இலவச பேருந்து

ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "வெற்றிப் பயணம்" திட்டம் காரணமாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும், பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது சம உரிமையை மீறும் செயல் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், அரசு இந்த இழப்பீட்டைத் தமக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்றும் வாதிட்டிருந்தார்.

பெண்கள் மகளிர் பேருந்து பிரியதர்ஷினி

தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது. மேலும், வெறும் 2 வழித்தடங்களில் மட்டும் பேருந்து இயக்கும் உரிமையாளர் எப்படி மாநிலம் முழுவதுமான திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர முடியும் என்றும், இதனைப் பொது நல வழக்காகக் கருத முடியாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிமன்றத்தின் இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.