டிச.3ம் தேதி பாடகி கெனிஷா நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு... ஆர்த்தி ரவி தொடர்ந்த ரூ.1.1 கோடி அவதூறு வழக்கில் திருப்பம்!

 
ஆர்த்தி ரவி கெனிஷா

நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி தொடர்ந்த சிவில் அவதூறு வழக்கில், பாடகி கெனிஷா வரும் டிசம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்றைய தினம் ஆஜராகத் தவறினால், வழக்கு அன்றே விசாரித்து முடிக்கப்படும் என்றும் மாஸ்டர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து வழக்கு ஏற்கெனவே குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில், பாடகி கெனிஷாவுக்கு எதிராக ஆர்த்தி ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் அவதூறு வழக்கைத் தொடர்ந்திருந்தார்.

கெனிஷா ரவி

தன்னைப் பற்றி அவதூறாகப் பேச கெனிஷாவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே தன்னைப் பற்றி அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஆர்த்தி ரவி தனது மனுவில் கோரியுள்ளார். மேலும், அவதூறு பரப்பியதற்காக கெனிஷா ரூ.1.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மரியா கிளாட், சாட்சிகள் பதிவுக்காக வழக்கின் விசாரணையை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.

கெனிஷா

இதனைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பாகப் பாடகி கெனிஷா வரும் டிசம்பர் 3-ஆம் தேதி மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவர் ஆஜராகாத பட்சத்தில், இந்த வழக்கு அன்றே விசாரித்து முடிக்கப்படும் எனவும் மாஸ்டர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.