சீமான் மீதான தேச விரோத வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்!

 
சீமான் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் உள்ளிட்டோர் மீது பாய்ந்திருந்த தேச விரோத வழக்கைச் செல்லாது என அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் வந்துள்ள இந்தத் தீர்ப்பு அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி துகள்களால் அந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதனைத் கண்டித்துச் சீமான் தலைமையில் காரைக்காலில் ஒரு பிரம்மாண்டப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின்போது பேசிய கருத்துக்கள் நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக இருப்பதாகக் கூறி, சீமான் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் உட்படப் பலர் மீது தேச விரோதப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சீமான்

இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் போராடுவது குடிமக்களின் உரிமை; அதனைத் தேச விரோதச் செயலாகக் கருத முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமானின் பேச்சால் தேசத்தின் பாதுகாப்புக்கு எவ்வித நேரடி அச்சுறுத்தலும் ஏற்பட்டதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அவர் மீதான வழக்கை ரத்து செய்தது.

சீமான்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சீமான் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நீண்ட காலமாக அவர் மீது இருந்த இந்தச் சட்டச் சிக்கல் நீங்கியிருப்பது நாம் தமிழர் கட்சிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது. "அறவழியில் போராடுபவர்களை முடக்க முடியாது என்பதற்கு இதுவே சாட்சி" என அக்கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.