காலையோ, கையையோ வெட்டினால் மட்டுமே மக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை உணர்வார்கள்... பாலியல் பலாத்கார வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
கர்நாடக மாநிலம் மணிப்பாலில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று வரும் கோபி ரெட்டி கார்த்திக் ரெட்டி என்ற மாணவர் மீது அவரது வகுப்புத் தோழி உடுப்பி மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரப் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கின் காரணமாகக் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த மாணவர், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். நடராஜ், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்க முழுமையாக மறுப்புத் தெரிவித்து உத்தரவிட்டார்.
People will obey laws only if punishment like chopping hands and legs is imposed: Karnataka HC
— Bar and Bench (@barandbench) June 1, 2026
report by @sidduin https://t.co/OE2xV0MNOR
இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றம் தனது கடுமையான வாய்மொழிக் கருத்துக்களைப் பதிவு செய்தது.அதில் தற்போதைய சூழலில் குற்றவாளிகளை நாம் உறுதியாகக் கையாளாததால் சட்டம் தன் வலிமையை இழந்துவிட்டதாகவும், மத்திய கிழக்கு நாடுகளைப் போலல்லாமல் இங்கு குற்றம் செய்வது மிகவும் எளிதாகிவிட்டது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். மேலும் ஜனநாயக அமைப்பின் கீழ் தங்களுக்குக் கிடைக்கும் உரிமைகளை மக்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளது போலக் குற்றவாளிகளின் கை அல்லது காலை வெட்டினால் மட்டுமே மக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை உணர்வார்கள் என்றும் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அயந்திகா மொண்டல், 2023 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும், தொடர்ந்து சிறையில் இருப்பது மாணவரின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும் வாதிட்டார். ஆனால் உப்பு சாப்பிட்டால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் சில நாட்கள் சிறை வாசத்தைப் பழகட்டும் எனக் கூறி ஜாமீனை மறுத்தார். பின்னர் இந்த மனு தொடர்பாக மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
