லாரி மோதி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர் பலி!

 
லாரி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்தில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராகப் பணியாற்றி வந்த கார்த்தி என்பவர், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில்நடப்பட்டுள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று, எதிர்பாராத விதமாகப் பணியில் இருந்த கார்த்தி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே அதே இடத்தில் மற்றொரு விபத்தும் நேரிட்டுள்ளது. 

விபத்தை ஏற்படுத்திய லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு லாரி, எதிர்பாராத விதமாக முந்தைய லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து இரண்டு லாரிகள் விபத்தில் சிக்கியதால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த ஊழியரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றிப் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.