இமாச்சலபிரதேசத்தில் திடீர் பனிப்பொழிவு... வழுக்கி விழுந்து 2 பக்தர்கள் பலி - 11 பேர் காயம்”!

 
இமாச்சல பிரதேசம்

 

இமாசலபிரதேச மாநிலம் லாஹவுல்-ஸ்பிதி மாவட்டத்தில் திடீரென பெய்த பனிப்பொழிவால் பனியால் மூடப்பட்ட பாதையில் வழுக்கி விழுந்து 2 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் லேசான காயமடைந்தனர்.லாஹவுல்-ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள டிரில்புரி கோரா பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென பனிப்பொழிவு ஏற்பட்டது. அப்போது அங்கு பரிக்ரமா சென்றிருந்த பக்தர்கள் பனியால் மூடப்பட்ட பாதையில் நடந்து சென்றனர்.

 

திடீர் பனிப்பொழிவால் பாதை முழுவதும் பனியால் மூடப்பட்டு வழுக்கும் நிலையில் காணப்பட்டது. இதில் பக்தர்கள் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.இந்த சம்பவத்தில் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கைச் சேர்ந்த தாவா டோமா பூட்டியா (74) மற்றும் கெய்லாங் பகுதியைச் சேர்ந்த யாங்சின் (64) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் லேசான காயமடைந்தனர்.

 

தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கெய்லாங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இமாசலபிரதேசத்தின் உயரமான மலைப்பகுதிகளில் பருவத்தின் முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ள நிலையில், திடீர் வானிலை மாற்றம் காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. உயரமான பகுதிகளுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வானிலை நிலவரத்தை கவனித்து பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.