இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கார் மீது பைக் மோதி விபத்து!
கோவையில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என உளவுத்துறை தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று கோவையில் உள்ள அமைப்பின் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். அலுவலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் மீது, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு நின்றிருந்த இந்து முன்னணி நிர்வாகிகள், உடனடியாகக் காட்டூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்தது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் விகாஷ் என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள முஸ்தபா என்பவரது கடையில் பணிபுரிந்து வருவது கண்டறியப்பட்டது. இந்து முன்னணி அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் காட்டூர் காவல்துறையினர் சி.எஸ்.ஆர். பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து இந்து முன்னணி மாநிலப் பொதுச்செயலாளர் கிஷோர்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்திற்கு ஏற்கனவே தொடர் கொலை மிரட்டல்கள் இருந்து வரும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பாகத் திருப்பூரில் உள்ள இந்து முன்னணி அலுவலக மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது மர்ம நபர் ஒருவர் ஏறிய சம்பவமும் நடந்துள்ளது.
இந்தத் தொடர் சந்தேகத்திற்குரிய சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, தமிழக உளவுப்பிரிவும் காவல்துறையும் இதன் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என விரிவான விசாரணை நடத்த வேண்டும். சதியில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்."
தலைவரின் கார் மீது பைக் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கோவை காவல் துறை சார்பில் அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
