22 புதிய கட்டுமானப் பணிகளை ரத்து செய்தது இந்து சமய அறநிலையத்துறை!
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருகோயில்களின் உபரி நிதியைப் பயன்படுத்தி புதிய திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் திட்டத்தைக் கைவிடுவதாக அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், இதுவரை தொடங்கப்படாமல் இருந்த மொத்தம் 22 முக்கியக் கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த தட்ட அரசாங்கத்தின் போது, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்களின் பயன்பாட்டிற்காகவும், கோயில்களின் வருவாயைப் பெருக்கவும் ஏதுவாக உபரி நிதியைக் கொண்டு திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், "கோயில்களின் உபரி நிதியை, ஆன்மீகக் காரியங்கள் மற்றும் கோயில்களின் பராமரிப்புத் தேவைகளைத் தாண்டி வணிக ரீதியிலான கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது" எனக் கூறி அத்திட்டங்களுக்குக் கடுமையான தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சட்டமன்ற அறிவிப்பில் இடம்பெற்று, நீதிமன்றத் தடையின் காரணமாக இதுவரை கட்டுமானப் பணிகள் எவையுமே தொடங்கப்படாமல் நிலுவையில் இருந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையாகக் கைவிடப்படுகின்றன.
இதில் 11 புதிய திருமண மண்டபங்கள் மற்றும் 11 அதிநவீன வணிக வளாகங்கள் என மொத்தம் 22 கட்டுமானப் பணிகள் சட்டமன்ற அறிவிப்புப் பட்டியலிலிருந்து முழுமையாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத் தீர்ப்பிற்கு மதிப்பளித்து அறநிலையத்துறை எடுத்துள்ள இந்தநடவடிக்கை, ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
