திருப்பரங்குன்றத்தில் குவியும் இந்து, இஸ்லாமியர்கள்... கோயில், தர்கா செல்லும் பக்தர்களுக்கு தீவிர சோதனை!
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க கோயில் மற்றும் தர்காவிற்கு செல்லும் இரு தரப்பினரையும் காவல்துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தி அனுமதித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று மாலை தீபம் ஏற்றப்பட உள்ளதால், அதிகாலை முதலே திருப்பரங்குன்றம் பகுதியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கோயிலுக்குச் செல்ல வரும் பக்தர்களைக் காவல்துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பிறகே கோயிலுக்குள் அனுமதித்து வருகின்றனர். இதேபோல், மலைப் பகுதியில் அமைந்துள்ள தர்காவிற்குச் செல்ல வந்த இஸ்லாமியர்களையும் போலீசார் சோதனை நடத்திய பின்னரே தர்காவிற்குள் செல்ல அனுமதி வழங்கினர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு விவாதங்களும் போராட்டங்களும் நடைபெற்று வந்த சூழலில், உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இன்று நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கவும், எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்கவும் அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
