பெரம்பூரில் தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!

 
பெரம்பூர் விஜய்

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு தவெக தலைவர் விஜய், இன்று தனது சொந்த சட்டமன்றத் தொகுதியான சென்னை பெரம்பூருக்கு முதன்முறையாக வருகை தந்துள்ளார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் தொகுதி மக்களின் உற்சாக வரவேற்புக்கு இடையே, தனது புதிய சட்டமன்ற உறுப்பினர்அலுவலகத்தைச் சற்றுமுன் திறந்து வைத்தார்.

பெரம்பூர் தொகுதிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய், புதிய அலுவலகத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த தவெக  கொள்கைத் தலைவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவித் தனது மரியாதையைச் செலுத்தினார். அதன் பின்னர், அலுவலகத்தின் உள்ளே சென்று சட்டமன்ற உறுப்பினருக்கான தனது பிரத்யேக இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.

தொகுதி மக்கள் தங்களது அரசு சார்ந்த தேவைகளை எளிதில் பெறும் வகையில், இந்த எம்.எல்.ஏ அலுவலக வளாகத்திலேயே அதிநவீன 'இ-சேவை மையம்' ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. புதிய இ-சேவை மையத்தையும் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், அங்கு பணிபுரியும் கணினி ஆபரேட்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் தொகுதி மக்களுக்குச் சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் இதர அரசு நலத்திட்டப் பதிவுகளை எப்படி விரைவாக மேற்கொள்வது என்பது குறித்து நேரடியாக உரையாடினார்.

இந்தத் தொடக்க விழாவைத் தொடர்ந்து, பெரம்பூர் தொகுதி மக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதலமைச்சரிடம் நேரடியாகச் சமர்ப்பித்தனர்.

பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்களது தொகுதிச் சட்டமன்ற உறுப்பினரைத் தொடர்பு கொண்டு குறைகளைத் தெரிவிக்க ஏதுவாக இந்த அலுவலகம் செயல்படும் எனத் தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதலமைச்சரின் வருகையையொட்டி பெரம்பூர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், விழா நடைபெற்ற பகுதி முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.