வரலாற்று பொக்கிஷம்... விழுப்புரம் அருகே 1000 ஆண்டு பழமை வாய்ந்த சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு!
விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே சாலையோரத்தில் இரண்டு பழமையான சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தபோது, அவை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால சிற்பங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு சிலை ஐந்து தலை நாகம் குடைபிடிக்க அமர்ந்த நிலையில் உள்ள பவுத்த மதத்தைச் சேர்ந்த 'போதிசத்துவர்' சிற்பம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு சிற்பம் கலைநயமிக்க துவாரபாலகர் சிலையாகும், இது நீண்ட மகுடம் மற்றும் கோரைப் பற்களுடன் மிகவும் கம்பீரமாகக் காணப்படுகிறது. மண்ணுக்குள் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சிற்பம், அந்த காலத்தில் அங்கு இருந்த பழமையான சிவாலயத்திற்கு உரியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதே பகுதியில் பல்லவர் காலத்துச் சிலைகளும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளதால், இந்தப் பகுதி பல்லவர் மற்றும் சோழர் காலங்களில் மிகச்சிறந்த வரலாற்று இடமாகத் திகழ்ந்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
கி.பி. 10 முதல் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தச் சோழர் கால சிற்பங்கள், அந்தப் பகுதியில் சைவம் மற்றும் வைணவத்துடன் பவுத்த மதமும் தழைத்தோங்கியதை பறைசாற்றுகின்றன. இத்தகைய அரிய வரலாற்றுச் சின்னங்களைக் கிராம மக்கள் பாதுகாப்பாகக் கையாள வேண்டும் என ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த சிலைகள் குறித்து தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல ஆய்வுகள் நடத்தவும் வரலாற்று ஆர்வலர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
