வெள்ளை மாளிகையில் வரலாறு... இங்கிலாந்து மன்னர் சார்லஸ் - ட்ரம்ப் சந்திப்பு - அமெரிக்காவின் 250வது சுதந்திர தின விழா!
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளனர். 2007-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவிற்கு இங்கிலாந்து மன்னர் மேற்கொள்ளும் முதல் அரசு முறைப் பயணம் இதுவாகும்.
வாஷிங்டன் டி.சி.-யில் உள்ள வெள்ளை மாளிகையின் தெற்கு போர்டிகோவில் (South Portico), அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவை நேற்று (ஏப்ரல் 28, 2026) உற்சாகமாக வரவேற்றனர்.

மன்னர் சார்லஸை வரவேற்கும் விதமாக 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை வழங்கப்பட்டது. வரவேற்பு நிகழ்வுக்குப் பிறகு, அதிபர் டிரம்ப் மற்றும் மன்னர் சார்லஸ் இருவரும் ஓவல் அலுவலகத்தில் (Oval Office) தனியாகச் சந்தித்துப் பேசினர்.
கடந்த சில மாதங்களாக ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்தச் சூழலில் மன்னரின் இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய "சிறப்பு உறவை" (Special Relationship) மீண்டும் புதுப்பிக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
மன்னர் சார்லஸ் இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (Joint Session of Congress) உரையாற்ற உள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் இரண்டாவது பிரிட்டிஷ் மன்னர் என்ற பெருமையை அவர் பெறுகிறார் (முன்பு 1991-ல் ராணி எலிசபெத் உரையாற்றினார்). தனது உரையில், "மறுசீரமைப்பு மற்றும் புதுப்பித்தல்" (Reconciliation and Renewal) என்ற கருப்பொருளின் கீழ் இரு நாடுகளின் நட்புறவு குறித்து அவர் பேசவுள்ளார்.

ஏப்ரல் 27 முதல் ஏப்ரல் 30 வரை அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் இருதரப்பு உறவை மேம்படுத்தல் ஆகிய காரணங்களை முன்னிட்டு பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
வாஷிங்டன் பயணத்திற்குப் பிறகு, மன்னர் சார்லஸ் நியூயார்க் மற்றும் வர்ஜீனியா மாகாணங்களுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளார். அமெரிக்கா - இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நிலவும் ராணுவ மற்றும் வர்த்தகச் சவால்களைச் சரிசெய்ய இந்தச் சந்திப்பு ஒரு பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
