இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... காரைக்கால், புதுச்சேரியில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!

 
மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 26, திங்கள்கிழமை) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தியாகதுருகம் வட்டாரத்தில் உள்ள விருகாவூர், பொரசக்குறிச்சி மற்றும் சின்னசேலம் ஈரியூர் ஆகிய பகுதிகளில் இயங்கும் 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பத்மஜா தெரிவித்துள்ளார்.

மழை விடுமுறை

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, பெரியகுளம் வட்டத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழையின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு குன்னூர், உதகை, கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை விடுமுறை

கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தொடரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் சுரங்கப்பாதைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.