தொடர் விடுமுறை நிறைவு.. சென்னை திரும்பும் மக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் இன்று சென்னைக்குத் திரும்புவதன் காரணமாக, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வெளியூர்களில் இருந்த பொதுமக்கள் மற்றும் பணிக்குத் திரும்புவோர் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாகத் தொடர் கனமழை பெய்து வருவதால், நகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இது வாகனங்களின் இயக்கத்தைக் மெதுவாக்கியுள்ளது.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஜிஎஸ்டி சாலை வழியாக நகருக்குள் நுழைய முயன்றதால், பல்லாவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியச் சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்கின்றன.

இதனால் அலுவலகம் செல்பவர்களும், வெளியூர்களில் இருந்து திரும்புவோரும் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், வாகனங்களை ஒழுங்குபடுத்தவும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
