தமிழகத்தில் தொடர் விடுமுறை.. ஒரே நாளில் 5.65 லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் பயணம்!

 
ரயில் கூட்ட நெரிசல் சொந்த ஊர்களுக்கு விடுமுறை தொடர் லீவு

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு, சனி மற்றும் ஞாயிறுடன் வார இறுதி நாட்கள் இணைந்த தொடர் விடுமுறை வந்துள்ளதால், சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் அரசுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் சுமார் 5.65 லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குப் பயணம் செய்துள்ளனர்.

ஆயுத பூஜையைக் கொண்டாடும் வகையில் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் சுமார் 30,000 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதன் அடிப்படையில் நேற்று மட்டும் சுமார் 2 லட்சம் பேர் அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்திருக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதவிர, இன்றும் நாளையும் பயணம் செய்வதற்காக முறையே 10,000 மற்றும் 4,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

ரயில் கூட்ட நெரிசல் சொந்த ஊர்களுக்கு விடுமுறை தொடர் லீவு

இதேபோல், ஆம்னி பேருந்துகள் தரப்பில் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்பட்டு நேற்று ஒரு நாளில் மட்டும் 1,626 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் சுமார் 85 சதவீத இருக்கைகள் நிரம்பி வழிந்ததுடன், சுமார் 65,000 பயணிகள் வரையில் பயணம் செய்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர் நோக்கிப் படையெடுத்ததால், சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ரயில் பயணங்களைப் பொருத்தவரை, ஆயுத பூஜைக்காக இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் பலர் உரிய நேரத்தில் ரயில்களைப் பிடித்தனர். இதன் காரணமாக சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் கொங்கு மண்டலங்களுக்குச் செல்லும் அனைத்து ரயல்களும் பயணிகளால் நிரம்பி வழிந்தன.

பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் தீபாவளி நெரிசல் சொந்த ஊர்

முன்பதிவில்லாப் பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் பயணிகள் பொதுப் பெட்டிகளின் படியில் தொங்கியபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் சூழல் உருவானது. தெற்கு ரயில்வே தரப்பின் கணக்கீட்டின்படி, நேற்று ஒரே நாளில் மட்டும் ரயில்கள் மூலம் சுமார் 3 லட்சம் பேர் சென்னை நகரை விட்டுப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். பஸ் மற்றும் ரயில்கள் என அனைத்துப் போக்குவரத்துச் சேவைகளையும் சேர்த்து ஒரே நாளில் 5,65,000 பேர் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது