துப்பாக்கியுடன் 'ரீல்ஸ்' வெளியிட்ட ஊர்க்காவல் படை வீரர்... தேர்தல் பாதுகாப்பில் பரபரப்பு!

 
துப்பாக்கி ரீல்ஸ் துப்பாக்கி ரீல்ஸ்

பழநி அருகே தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவர், துப்பாக்கியுடன் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநி வத்தக்கவுண்டன்வலசு கிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ராஜ்குமார். இவர் ஊர்க்காவல் படையில் வீரராகப் பணியாற்றி வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலையொட்டி, பாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணிக்காக இவர் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் ஒருவரின் துப்பாக்கியைப் பெற்று, அதனுடன் கெத்தாக நிற்பது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'ரீல்ஸ்' ஆகப் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. பாதுகாப்புப் பணியின்போது விதிகளுக்குப் புறம்பாக ஆயுதங்களைக் கையாள்வதும், அதை விளம்பரப்படுத்துவதும் சட்டப்படி குற்றம் என்பதால் காவல்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக, முறையான அனுமதியின்றி துப்பாக்கியை ராஜ்குமாரிடம் கொடுத்த சிஆர்பிஎப் வீரர் மற்றும் வீடியோவில் தோன்றி சர்ச்சையை ஏற்படுத்திய ஊர்க்காவல் படை வீரர் ராஜ்குமார் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் இருந்தபோது நடந்த இந்த அலட்சியமான செயல் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.