விழுப்புரத்தில் ஆணவக் கொலை... காதலைக் கைவிட மறுத்த மகளைத் தூங்கும்போது கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே, காதல் விவகாரத்தில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயதுச் சிறுமியைப் பெற்ற தந்தையே தூங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வானூர் அடுத்த வி.பரங்கனி கிராமத்தைச் சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுநர் சிவசாஸ்திரி என்பவரின் 14 வயது மகள், ராணிப்பேட்டையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இக்காதல் விவகாரம் தெரியவந்ததும் பெற்றோர் சிறுமியைக் கண்டித்து, சொந்த ஊருக்கு அழைத்து வந்து வானூர் அருகே கரசானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் சேர்த்துள்ளனர்.

ஊர் மாறிய போதிலும், அச்சிறுமி தனது காதலனுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பெற்றோர் பலமுறை கண்டித்தும் சிறுமி காதலைக் கைவிட மறுத்துள்ளார்.
நேற்று இரவு சிறுமியின் தாய் வேலூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் சிறுமி தூங்கிக் கொண்டிருந்தார். ஆத்திரத்தில் இருந்த தந்தை சிவசாஸ்திரி, தூங்கிக் கொண்டிருந்த மகளின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு தனது சகோதரருக்குத் தொலைபேசியில் அழைத்து மகனைக் கொன்று விட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டு வானூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த வானூர் காவல் துறையினர், வீட்டிலேயே இருந்த தந்தை சிவசாஸ்திரியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெற்ற மகளையே தந்தையே ஆணவத்தால் கழுத்தை நெரித்துக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
