கொடூரம்... 1½ வயதுக் குழந்தையைக் கடித்துக் குதறிய தெருநாய்கள்... பலியான துயரம்!

 
தெருநாய் நாய்

கர்நாடக மாநிலத்தில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுப் பெண் குழந்தையை ஆறு தெருநாய்கள் கூட்டமாகச் சேர்ந்து கடித்துக் குதறியதில், அக்குழந்தை சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கே.ஹஞ்சிகலா முகாம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவருடைய மனைவி நதாப். இந்த தம்பதிக்கு அனம் என்ற ஒன்றரை வயதுப் பெண் குழந்தை இருந்தது.

நேற்று அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை அனம், திடீரெனக் கண் விழித்து வீட்டை விட்டு வெளியே வந்து வாசலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது, அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோழி இறைச்சிக் கடை அருகே நின்றுகொண்டிருந்த ஆறு தெருநாய்கள், திடீரெனக் குழந்தையைச் சூழ்ந்து கொண்டு கொடூரமாகத் தாக்கத் தொடங்கின.

தெருநாய்

ஆறு நாய்களும் ஒன்று சேர்ந்து அனமைக் கடித்துக் குதறியதில், நிலை குலைந்து போன குழந்தையைத் தெருநாய்கள் தரதரவென இழுத்துச் சென்றன. குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அண்டை வீட்டாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.

அவர்கள் கையில் கிடைத்த கற்கள் மற்றும் உருட்டுக் கட்டைகளைக் கொண்டு தெருநாய்களை அடித்து விரட்டினர். இருப்பினும், நாய்கள் கடித்ததில் குழந்தையின் கழுத்து, மார்பு, முதுகு உட்பட உடல் முழுவதும் பலத்த மற்றும் ஆழமான காயங்கள் ஏற்பட்டிருந்தன.

நாய் தெருநாய் வெறிநாய்

இரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை அவசர அவசரமாக மீட்ட பெற்றோர், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக ராய்ச்சூரில் உள்ள ரிம்ஸ் அரசு மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே கடுமையான ரத்தப்போக்கு மற்றும் மாரடைப்பு காரணமாகக் குழந்தை அனம் பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவதால் தெருநாய்களின் தொல்லை அதிகரிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.