கொடூரம்... ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை!
கடன் தொல்லையால், கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கத்தில், தனது இரண்டு குழந்தைகளுடன், தாய் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் ஷம்சியா (26). இவரது கணவர் ஆசிப், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கடன் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். கணவரை இழந்த ஷம்சியா, தனது மகள் ஆசிபா(10) மற்றும் மகன் அப்தர் (5) ஆகியோருடன் வசித்து வந்தார். கணவர் விட்டுச் சென்ற அதிகப்படியான கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ஷம்சியா கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தனது 2 குழந்தைகளையும் வெளியில் அழைத்துச் சென்ற ஷம்சியா, அவர்களுக்குப் பிடித்தமான ஐஸ்கிரீம் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். குழந்தைகளைச் சந்தோஷமாகச் சாப்பிட வைத்த அவர், பின்னர் மாடம்பாக்கம் அருகே உள்ள ஆள்நடமாட்டமில்லாத ஒரு விவசாயக் கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டு, தானும் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்து வந்த படப்பை தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தாய் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்டனர். சம்பவ இடத்திலிருந்து ஷம்சியா எழுதிய உருக்கமான தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், "கடன் தொல்லையைத் தாங்க முடியாமல் இந்த முடிவை எடுக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

படப்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் யார்? மிரட்டல் ஏதும் விடுக்கப்பட்டதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதது, அங்கிருந்த பொதுமக்களின் கண்களைக் குளமாக்கியது.
