ரிவர்ஸ் எடுத்தப் போது கொடூரம்... பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி மாணவி மரணம்!
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3ஆம் வகுப்பு படித்து வந்த மேகனா என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வாகனங்களை இயக்கும்போது கவனக்குறைவாகச் செயல்பட்டதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், மாணவி மேகனா மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல் பள்ளி வாகனத்தில் மேகனா பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளி வளாகத்திற்குள் வேன் வந்து சேர்ந்ததும், மேகனா உள்ளிட்ட குழந்தைகள் அனைவரும் வாகனத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.

குழந்தைகள் அனைவரும் பத்திரமாக இறங்கி விட்டார்களா என்பதைச் சரிபார்க்காமல், வேன் ஓட்டுநர் வாகனத்தை திடீரென பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வேனின் பின் சக்கரம் சிறுமி மேகனாவின் மீது ஏறியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி மேகனா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏற்காடு போலீசார், உயிரிழந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்குக் காரணமா என்ற கோணத்தில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள்ளேயே வேன் ஏறி மாணவி உயிரிழந்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
