மத்தியப் பிரதேசத்தில் கோர விபத்து.. பேருந்து - பிக்கப் வாகனம் மோதி 10 பேர் பலி!

 
விபத்து விபத்து

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிந்த்வாரா பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும், சரக்குகளை ஏற்றி வந்த பிக்கப் (Pick-up) வாகனம் ஒன்றும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

விபத்து

இந்த மோதலின் வேகம் காரணமாக இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

விபத்து

இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000 வழங்கவும், அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அதிவேகமாக வந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிந்த்வாரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்திற்கான சரியான காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.