சேலத்தில் கோர விபத்து... லாரிக்குள் சிக்கி உயிருக்குப் போராடிய ஓட்டுநர் மீட்பு!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் இன்று பயங்கரமான சாலை விபத்து ஒன்று நிகண்டுள்ளது. பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக அதன் முன்பாகச் சென்ற மற்றொரு லாரி மீது மோதிப் பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் மோதிய லாரியின் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதன் காரணமாக, லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் உயிருக்குப் போராடினார். இது குறித்துத் தகவலறிந்ததும் தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு நீண்ட நேரம் போராடி, லாரியின் இடிபாடுகளை அகற்றி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அந்த லாரி ஓட்டுநரைப் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட ஓட்டுநருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர மருத்துவர் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
