உ.பி.யில் கோர விபத்து... 60 அடி உயர ராட்டினம் சரிந்து விழுந்து 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் - 3 பேர் கவலைக்கிடம்!

 
ராட்டினம் ராட்டினம்

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் நாராயணி நதிக்கரையில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் 'சைத்ர பூர்ணிமா' முன்னிட்டு 'பைன்சா' திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட ராட்டினம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் அந்த ராட்டினத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர். இது அதன் தாங்கும் திறனை விட அதிகம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ராட்டினம்

ராட்டினம் சுற்றத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதில் இருந்து விசித்திரமான சத்தம் (Creaking sound) வந்துள்ளது. மக்கள் கூச்சலிட்டும் இயக்குபவர் அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இயக்கியுள்ளார். இரண்டு சுற்றுகளை முடித்த நிலையில், ராட்டினத்தின் அடிப்பாகம் பெயர்ந்து சுமார் 60 அடி உயரத்தில் இருந்து அப்படியே பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. இதில் அங்கிருந்த கடைகளும் நசுங்கின. இந்த விபத்தில் 30  பேர் வரை காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இவர்களில் 10-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் உயர் சிகிச்சைக்காகக் கோரக்பூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ராட்டினம்

6 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராட வேண்டியிருந்தது.

திருவிழாவில் இவ்வளவு பெரிய ராட்டினத்தை அமைக்க முறையான அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. விபத்திற்குப் பின் ராட்டினத்தை இயக்கிய ஊழியர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அவர்கள் மீது கடுமையான வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.