ரயில் - பஸ் மோதி பயங்கர விபத்து.. வங்காளதேசத்தில் 12 பேர் பலி; பலர் படுகாயம்!
வங்காளதேசத்தின் காமில்லா நகரில் நிகழ்ந்த கோரமான ரயில் - பஸ் விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
டாக்கா-சிட்டகாங் நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கிராசிங் ஒன்றில் நேற்று இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காமில்லா நகரின் பதுவா பஜார் பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங் பகுதியில் ஒரு பேருந்து ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த ரயில் அதன் மீது மோதியது.

மோதிய வேகத்தில் ரயில் இன்ஜின், அந்தப் பேருந்தை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தண்டவாளத்திலேயே இழுத்துச் சென்றுள்ளது. அதன் பின்னரே ரயில் நின்றுள்ளது. இந்த விபத்தில் 7 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் என மொத்தம் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பேருந்தில் பயணித்த சுமார் 20 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு காமில்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் டாக்கா-சிட்டகாங் இடையிலான முக்கிய ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, தண்டவாளத்தில் உருக்குலைந்து கிடந்த பேருந்தின் பாகங்கள் அகற்றப்பட்டு ரயில் சேவை சீரமைக்கப்பட்டது.
