பெங்களூருவில் கொடூரம்... லிவ்-இன் ரிலேஷன்ஷிப்... திருமணத்திற்கு மறுத்த காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த காதலிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருப்பதாகச் சந்தேகமடைந்து, அவரது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கங்கியா சூபா (22). இவரும் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த பூர்வா லேஷ்பா (24) என்ற வாலிபரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். வேலை நிமித்தமாகப் பெங்களூருவில் வசித்து வந்த இந்த ஜோடி, கடந்த ஒரு மாதமாக அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் ஒன்றாகத் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.
நன்றாகச் சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், சமீபகாலமாகப் பூர்வா லேஷ்பாவிற்குத் தனது காதலி கங்கியா சூபாவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கங்கியாவுக்கு வேறொரு இளைஞருடன் பழக்கம் இருப்பதாகச் சந்தேகமடைந்த பூர்வா, இதனால் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதற்கிடையே, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கங்கியாவிடம் பூர்வா வற்புறுத்தியுள்ளார். ஆனால், பூர்வாவின் தொடர் சந்தேகக் குணத்தால் அதிருப்தியடைந்த கங்கியா, அவரைத் திருமணம் செய்ய மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தத் திருமண மறுப்பு விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற பூர்வா லேஷ்பா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்துத் தான் காதலித்த கங்கியா சூபாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கங்கியா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காதலியைக் கொலை செய்த பின்னர், மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகப் பூர்வா லேஷ்பா அங்கிருந்து தப்பியோடினார். இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெங்களூரு போலீசார், கங்கியாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
மேலும், தப்பியோடிய கொலையாளி பூர்வாவைத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், சில மணி நேரங்களிலேயே அவரைக் கைது செய்தனர்.
