நாமக்கல் அருகே கொடூரம்... மினி லாரி மீது குடிநீர் தொட்டி சரிந்து விழுந்து விபத்து – 2 பேர் பலி!

 
குடிநீர் தொட்டி

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே முட்டை ஏற்றிச் சென்ற மினி லாரி விபத்துக்குள்ளானதில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி லாரியின் மீது சரிந்து விழுந்து இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் திடுக்கிடும் விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் முட்டைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில், மல்லசமுத்திரம் அருகே முட்டைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த மினி லாரி ஒன்று, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த பஞ்சாயத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூணில் பலமாக மோதியது.

பள்ளி மானவி தற்கொலை

லாரி மோதிய வேகத்தில், அந்த குடிநீர் தொட்டியின் கட்டமைப்பு பலமிழந்து அப்படியே லாரியின் கூரை மீது பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது. இதில் லாரியின் முன்பகுதி முற்றிலும் நசுங்கிச் சிதைந்தது. தொட்டி இடிந்து விழுந்ததில் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி, அதிலிருந்த இருவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மல்லசமுத்திரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர், கிரேன் இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்தவர்களின் முகவரியைக் கண்டறியும் பணியிலும், விபத்துக்கான காரணம் குறித்தும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.