பிரபல நடிகை வீட்டில் கொடூரம்.. நண்பர் தூக்கில் தொங்கியபடி மர்ம மரணம் - போலீசார் விசாரணை!

 
கிருஷி தபாண்டா

கன்னடத் திரையுலகின் பிரபல நடிகையான கிருஷி தபாண்டாவின் பெங்களூரு இல்லத்தில், அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அண்டை மாநிலத் திரைத்துறையிலும், பொதுமக்களிடையேயும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நடிகை கிருஷி தபாண்டாவின் வீட்டிற்கு அவரது நண்பரான வைஷாக் என்பவர் வந்துள்ளார். இந்த நிலையில், அங்கு யாரும் எதிர்பாராத விதமாக வைஷாக் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

வைஷாக் தற்கொலை செய்து கொள்வதற்குச் சற்று முன்பாக, தான் தனது உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக நடிகை கிருஷி தபாண்டாவிடம் நேரடியாகக் கூறியதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார், இருவருக்கும் இடையே ஏதேனும் வாக்குவாதங்கள் நிகழ்ந்ததா என்ற விபரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த பெங்களூரு நகரப் போலீசார், வைஷாந்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் நீடிப்பதால், இது தற்கொலையா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் சதித்திட்டங்கள் இருக்கலாமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 'மர்ம மரணம்' எனப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்த நடிகை கிருஷி தபாண்டா மற்றும் அவரது வீட்டில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்மமான முறையில் உயிரிழந்துள்ள வைஷாக் சாதாரணமானவர் அல்ல என்பதும், அவர் ஏற்கனவே பல்வேறு குற்றப் பின்னணிகளைக் கொண்டவர் என்பதும் போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அரவிந்த் ரெட்டி என்பவரைக் கடத்தி, பல கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய மிக முக்கிய வழக்கில் இந்த வைஷாக்கிற்குத் நேரடித் தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக அவர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.