அதிகாலையில் பயங்கரம்... டெல்லியில் தீ விபத்தில் 4 பேர் பலி; 2 பேர் படுகாயம்... தீயணைப்பு வீரர்கள் போராட்டம்!
விடுமுறை தினமான இன்று அதிகாலையிலேயே பெரும் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் ஷாதரா மாவட்டம் விஷ்வாஸ் நகரில், வீடு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீவிபத்தில் மேலும் 2 பேர் பயங்கர தீக்காயங்களுடன் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி ஷாதரா மாவட்டத்தில் உள்ள விஷ்வாஸ் நகர் 11-வது தெருவில் அமைந்துள்ள வீட்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் ரிக்ஷாக்களுக்கு சார்ஜ் செய்யும் மையம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிடத்தின் தரைத்தளத்தில் செயல்பட்டு வந்த சார்ஜிங் மையத்தில் இருந்து தீ பரவியதாகக் கூறப்படுகிறது.

இன்று அதிகாலை 4.15 மணிக்கு தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சியால் கடும் போராட்டத்திற்குப் பிறகு காலை 5 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
