பெங்களூரில் கொடூரம்... இந்தி தெரியாது என்று கூறியதால் கன்னட இளைஞரைத் தாக்கிய கும்பல்!

 
இந்தி

பெங்களூருவில் டெலிவரி ஊழியராகப் பணிபுரியும் கன்னட இளைஞர் ஒருவரை "இந்தி தெரியாது" என்று கூறியதற்காகப் பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெலிவரி கொடுக்கச் சென்ற இடத்தில், அந்த ஊழியரிடம் குறிப்பிட்ட நபர் இந்தியில் பேசியுள்ளார். அதற்கு அந்த ஊழியர், "எனக்கு இந்தி தெரியாது, எதற்காகத் திட்டுகிறீர்கள் என்று கன்னடத்திலேயே கூறுங்கள்" எனக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட கும்பல், அந்த இளைஞரைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தீவிரமாகத் தாக்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட டெலிவரி ஊழியர் அளித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

"சொந்த மாநிலமான கர்நாடகாவிலேயே கன்னடம் பேசுபவர்களுக்கும் கன்னடர்களுக்கும் பாதுகாப்பு இல்லையா?" எனக் கேள்வி எழுப்பியுள்ள கன்னட அமைப்புகள், இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளன.