பெங்களூரில் கொடூரம்... மனைவியைக் கொடூரமாக கொன்று, வீடியோ எடுத்து மாமனார், மாமியாருக்கு அனுப்பி வைத்த கணவன்!
கர்நாடக மாநிலத்தில், மீண்டும் இணைந்து வாழலாம் என ஆசை வார்த்தை கூறி கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை அழைத்து வந்து, கொடூரமாகக் கொலை செய்து, அதை வீடியோ எடுத்து மனைவியின் பெற்றோருக்கு அனுப்பிய கணவனைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் கலகலி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் ஜிகலூர். இவருக்கும் பாக்யஸ்ரீ (23) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மனைவியின் நடத்தை மீது எழுந்த சந்தேகம் மற்றும் குடும்பத் தகராறு காரணமாக, பாக்யஸ்ரீ கடந்த இரண்டு மாதங்களாகக் கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாக்யஸ்ரீயின் பெற்றோர் வீட்டிற்குச் சென்ற பிரவீன், பழைய சண்டை, சச்சரவுகளை எல்லாம் மறந்துவிட்டு மீண்டும் இணைந்து வாழலாம் எனக் கூறி அவரைத் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்த அன்றைய தினமே மாலையில் இருவருக்குள்ளும் மீண்டும் தகராறு வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன், பாக்யஸ்ரீயைக் கட்டையால் தாக்கிவிட்டு, பின்னர் அவரைப் பலவந்தமாகத் தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.
பாக்யஸ்ரீ உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இறுதித் தருணங்களைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்த பிரவீன், அதை மனைவியின் பெற்றோருக்கு வீடியோ கால் மூலம் காட்டி அச்சுறுத்தியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த பாக்யஸ்ரீயின் பெற்றோர் இது குறித்து அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிலகி தாலுகா காவல்துறையினர், பாக்யஸ்ரீயின் உடலைக் கைப்பற்றினர். இக்கொடூரச் செயலைச் செய்து விட்டு, அங்கிருந்து தப்பியோட முயன்ற பிரவீனை மடக்கிப் பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
