பெங்களூரில் கொடூரம்... சமைக்காமல் 'ரீல்ஸ்' வீடியோ பதிவிட்ட மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்!
பெங்களூருவில் உணவு சமைக்காமல் எப்போதும் சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்' வீடியோக்கள் வெளியிடுவதிலேயே கவனம் செலுத்தி வந்த மனைவியைக் கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த தீரஜ் குமார் (24) மற்றும் ரீமா குமாரி ஆகிய இருவரும் காதலித்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு, பெங்களூருவின் கும்பல்கோடு பகுதியில் வசித்து வந்தனர். ரீமா எப்போதும் இன்ஸ்டாகிராம் 'ரீல்ஸ்' போடுவதில் தீவிர ஆர்வம் காட்டி வந்ததாகவும், கணவரைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே சமையல் செய்வதில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தீரஜ், ரீமாவின் துப்பட்டா அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
மனைவியின் உடலைப் படுக்கை விரிப்பில் சுற்றி அறைக்குள்ளேயே மறைத்து வைத்து விட்டு, தீரஜ் தனது சொந்த ஊரான பீகாருக்குத் தப்பிச் சென்றார். தகவல் அறிந்த பெங்களூரு கும்பல்கோடு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு பீகாருக்குச் சென்று தீரஜைக் கைது செய்தனர்.
"ரீமா தனக்கு மட்டுமே உணவு சமைத்துச் சாப்பிட்டு வந்தார். நான் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது எனக்குச் சாப்பாடு வைக்கவில்லை. ரீல்ஸ் மோகத்தால் என்னைக் கண்டு கொள்ளாததும், உணவு சமைக்காததுமே இந்த மோதலுக்குக் காரணம்" என தீரஜ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
