பெங்களூருவில் கோரத்தாண்டவம்.. கனமழையால் அரசு மருத்துவமனை சுவர் இடிந்து 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி; 7 பேர் படுகாயம்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெய்த அதீத கனமழை மற்றும் சூறாவளி காற்றினால், மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சிவாஜிநகர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் அருகே, மழையிலிருந்து தப்பிக்கப் பொதுமக்கள் ஒதுங்கியிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாகப் பழமையான அந்தச் சுவர் பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்ததில், அங்கு நின்றிருந்த நடைபாதை வியாபாரிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதில் 3 பச்சிளம் குழந்தைகள் உட்பட 7 பேர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் போலீசார், இடிபாடுகளை அகற்றி காயமடைந்த 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் உடனடியாக அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உயர்தரச் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பெங்களூரு மாநகரம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், இந்த விபத்து பெரும் சோகத்தைக் கூட்டியுள்ளது. மருத்துவமனையின் சுற்றுச்சுவர் முறையாகப் பராமரிக்கப்படாததே இத்தகைய விபத்திற்குக் காரணம் எனப் பொதுமக்கள் ஆவேசமாகத் தங்கள் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், நகரில் உள்ள மற்ற பலவீனமான சுவர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மழையில் ஒதுங்கியவர்களுக்குச் சாவே பரிசாகக் கிடைத்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
