ஈரோட்டில் கொடூரம்... அரசுப் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி!

 
மின்சாரம் தாக்கி பள்ளி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பள்ளி வளாகத்தில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால் 6-ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பவானி அருகே உள்ள குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், யோகேஷ் (11) என்ற மாணவன் 6-ஆம் வகுப்பு படித்து வந்தான்.

இன்று மதிய உணவு இடைவேளையின் போது யோகேஷ் பள்ளி வளாகத்தில் நடந்து சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்ததில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தான். காயமடைந்த மாணவனை மீட்ட பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.

மாணவனின் உயிரிழப்பால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளியின் அலட்சியப் போக்கைக் கண்டித்து ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.