மகாபலிபுரத்தில் கொடூரம்... போர்வெல் அமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே போர்வெல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் இடத்தில் போர்வெல் அமைக்கும் பணிக்காகத் தொழிலாளர்கள் இயந்திரங்களுடன் இன்று தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். பணியின்போது இரும்பு பைப்புகள் மற்றும் போர்வெல் உபகரணங்களை மேலே தூக்கிய போது, எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் மின் அழுத்தக் கம்பியில் அந்த உபகரணங்கள் உரசியுள்ளன.

கண்ணிமைக்கும் நேரத்தில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வழியாக மின்சாரம் பாய்ந்ததில், பணியில் நேரடியாக ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்களும் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் கோர விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், மாமல்லபுரம் காவல் நிலையப் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றனர். மின் இணைப்பைத் துண்டித்த மீட்புக் குழுவினர், உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன, பணியின்போது தகுந்த பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா மற்றும் ஒப்பந்ததாரரின் அலட்சியம் ஏதும் உள்ளதா என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
