தஞ்சையில் கொடூரம்... 7 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ராஜமனோகரன்(56), போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ராஜமனோகரன் (56), அதே பள்ளியில் பயின்று வரும் 7 மாணவிகளுக்குப் பல்வேறு சமயங்களில் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவிகள், ஒருகட்டத்தில் ஆசிரியரின் பாலியல் தொல்லையைத் தாங்க முடியாது, இது குறித்துத் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து, அனைத்து மகளிர் போலீசார் இந்த விவகாரம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆசிரியர் மீதான புகார்கள் உறுதியானதைத் தொடர்ந்து, ராஜமனோகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசாரால் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜமனோகரன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
கல்வி கற்கும் இடத்தில் மாணவிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியரே இத்தகைய செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை இது போன்ற சம்பவங்களைத் தடுக்கக் கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது இந்த ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
