விருதுநகரில் பயங்கரம்.. கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியையும் நண்பரையும் கொடூரமாகக் கொலை செய்த கணவன்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் பாறாங்கல்லைத் தலையில் போட்டுப் படுகொலை செய்த கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலையம்பட்டி கொத்தனார் காலனியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (26). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பொன்னழகு (22) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு முகேஷ் (5), முகிலன் (3), ஹர்சிதா (2) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். சரவணக்குமார் வெளியூர்களுக்கு காண்டிராக்ட் அடிப்படையில் கட்டுமானப் பணிகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் ஆனந்தராஜ் (30) என்பவரும் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணமாகிக் காஞ்சனா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ள ஆனந்தராஜூம், சரவணக்குமாரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். பாலையம்பட்டியில் உள்ள தனது தாயாரைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் ஆனந்தராஜ் சரவணக்குமாரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது சரவணக்குமாரின் மனைவியான பொன்னழகுக்கும், ஆனந்தராஜூக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

சரவணக்குமார் வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்லும் நேரங்களிலெல்லாம், ஆனந்தராஜை வீட்டிற்கு வரவழைத்து இருவரும் கணவன்-மனைவி போல் குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சரவணக்குமாரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சரவணக்குமார் தனது மனைவியைக் கண்டித்ததுடன், நண்பன் ஆனந்தராஜை நேரில் அழைத்து எச்சரித்துள்ளார். ஆனாலும், அந்த கள்ளக்காதல் ஜோடி அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தங்கள் உறவைத் தொடர்ந்ததுடன், பகிரங்கமாகவே குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வேலை முடிந்து வீடு திரும்பிய சரவணக்குமார், தனது மனைவியும் கள்ளக்காதலன் ஆனந்தராஜூம் ஒன்றாக இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அவர், வீட்டில் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். அதுவுமின்றி அங்கிருந்த பாறாங்கல்லை எடுத்து அவர்கள் மீது போட்டு கொடூரமான முறையில் கொலை செய்தார்.

அலறல் சத்தத்தைக் கேட்டு விழித்த குழந்தைகள் மூவரும் பயத்தில் அலறத் தொடங்கினர். அலறி அடித்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பொன்னழகு மற்றும் ஆனந்தராஜ் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலையுண்ட இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவான சரவணக்குமாரைத் தேடிய போலீசார், நேற்று அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் சுற்றித்திரிந்த அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். தாய் கொலை செய்யப்பட்டு, தந்தை கைது செய்யப்பட்டுச் சிறைக்குச் சென்றதால் அந்த மூன்று பச்சைக்குழந்தைகளும் தத்தளித்து நிற்கும் பரிதாப நிலை அப்பகுதி மக்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
