குதிரைப்பேர வழக்கு.. செந்தில் பாலாஜியின் சகோதரர் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு!
தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினரிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் இளையராஜா, கடந்த ஜூன் 29 அன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். தவெக தலைமையிலான ஆட்சியைச் சட்டத்திற்குப் புறம்பாகக் கவிழ்ப்பதற்காகத் தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாகவும், அதற்கு மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்ட சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்தச் சதித் திட்டத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறிப் போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர். இந்தச் சூழலில், காவல் துறையினரால் தான் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க அசோக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி சி. குமரப்பன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் குறித்து விரிவான பதிலளிக்கக் காவல் துறை தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அசோக்குமாரின் முன்ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டது.
மனுதாரரான அசோக்குமார் தனது முன்ஜாமீன் மனுவில், தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் தான் நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ எந்தவொரு குதிரைப்பேரப் பேச்சுகளிலும் ஈடுபடவில்லை. இந்த வழக்கில் தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத நிலையில், அரசியல் உள்நோக்கத்தோடு, முன்னாள் அமைச்சரின் தம்பி என்ற ஒரே காரணத்திற்காகத் தனது பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
