குதிரை பேர வழக்கு... ஆதாரங்களை அழித்த லட்சமண பெருமாளுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ்!

 
பேரம் லட்சமண பெருமாள் கரூர்

தவெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் ₹35 கோடி குதிரை பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், சர்வதேச அளவில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார், சிங்கப்பூரில் பதுங்கியிருக்கும் லட்சமண பெருமாள் என்பவருக்கு எதிராக லுக் அவுட்  நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

இந்தக் குதிரை பேரச் சதித் திட்டம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 5 நபர்கள் மற்றும்  போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள இரண்டு அரசு மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லட்சமண பெருமாள் என்பவருக்கு இந்த விவகாரத்தில் மிக முக்கியப் பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பேரப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற தனியார் நட்சத்திர ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை, லட்சமண பெருமாள் தனது தொழில்நுட்பத் திறமையைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் முற்றிலுமாக அழித்து ஆதாரங்களை மறைத்துள்ளார் எனப் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

செந்தில் பாலாஜி, அசோக்குமார்

இதுமட்டுமன்றி, கைது செய்யப்பட்ட நபர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் இடையே பணப் பரிமாற்றம் குறித்து நடைபெற்ற வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் ரகசியத் தகவல்களையும் அவர் 'ரிமோட் ஆக்ஸஸ்' மூலம் துடைத்து அழித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு இந்த வழக்கில் தங்களுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லை எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டு வரும் வேளையில், திட்டமிட்டு டிஜிட்டல் ஆதாரங்களை அழித்த லட்சமண பெருமாளின் இந்தச் செயல் வழக்கின் போக்கை மாற்றியுள்ளது.

யூ ட்யூபர் செந்தில் பேரம்

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள அவரை இந்தியாவிற்கு வரவழைத்துக் கைது செய்யும் நோக்கில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் இந்தியாவிற்குள் நுழைய முற்பட்டாலோ அல்லது வேறு நாடுகளுக்குப் பயணிக்க முயன்றாலோ உடனடியாகக் குடிவரவுத் துறை  அதிகாரிகளால் கைது செய்யப்படுவார் எனத் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவர்கள் பிடிபட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் தொடர்புகளும் அம்பலமாகி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்றியுள்ளது.