குதிரை பேர வழக்கு.. சகோரருடன் நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி!
தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக் குமாரும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டனர். தவெக எம்.எல்.ஏ-விடம் கட்சி மாறுவதற்காகப் பணப் பேரம் மற்றும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகச் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

முன்ஜாமீன் வழங்கிய போது, குறிப்பிட்ட நாட்களில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையையும் நீதிமன்றம் விதித்திருந்தது. நீதிமன்றத்தின் இந்த நிபந்தனை உத்தரவைப் பின்பற்றும் வகையில் இருவரும் நேரில் ஆஜராகியுள்ளனர்:
நீதிமன்றக் கெடுவின்படி, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் இன்று காலை நேரில் ஆஜராகித் தங்களது கையொப்பத்தைப் பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் காவல் நிலையத்திற்கு வருகை தந்ததை ஒட்டி, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கக் காவல் நிலையத்தைச் சுற்றிப் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பும் பரபரப்பும் நிலவியது.
