பல் வலிக்கு வந்த முதியவரின் 12 பற்களைப் பிடுங்கி, ரூ.2.6 லட்சம் ஏமாற்றிய மருத்துவமனைக்கு சீல்!

 
சீல்

சீனாவில் பல் வலிக்குச் சிகிச்சை பெற வந்த முதியவர் ஒருவரை மயக்க நிலையில் வைத்து, அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடியதுடன், வாயில் நல்ல நிலையில் இருந்த 12 பற்களையும் பிடுங்கி கொடுமை இழைத்த தனியார் பல் மருத்துவமனைக்குச் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சீனாவின் ஷான்சி மாகாணம், பாஒஜி நகரைச் சேர்ந்த லீ (63) என்ற முதியவர் பல் வலியால் அவதிப்பட்டுள்ளார். அங்குள்ள “டேட்டுவான்யுவான் பல் மருத்துவமனை” என்ற தனியார் மையம், "காலையிலேயே செயற்கை பல் செட் மாற்றிவிட்டு, மதியமே கறி சாப்பிடலாம்", "முழு பற்களுடன் 100 வயது வரை வாழலாம்" என வெளியிட்ட கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி லீ சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

பல் வலிக்காக வந்த அந்த முதியவருக்கு எவ்வித முறையான மருத்துவப் பரிசோதனைகளையும் செய்யாமல், அவரது வாயில் நல்ல நிலையில் இருந்த 12 பற்களை பிடுங்கி எறிந்துவிட்டு, 10 செயற்கை பற்களைத் அவசர அவசரமாகப் பொருத்தியுள்ளனர்.

அத்துடன் நிறுத்தாமல், மயக்க நிலையில் இருந்த முதியவரின் மொபைல் போனை பயன்படுத்தி, அவரது டிஜிட்டல் பணப்பை மற்றும் வங்கிக் கணக்குகளில் இருந்த 18,800 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.6 லட்சம்) பணத்தையும் மருத்துவமனை நிர்வாகத்தினர் திருடியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட முதியவர் லீ, ஏற்கனவே மாரடைப்பு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற தீவிரப் பாதிப்புகளுக்கு  மருத்துவச் சிகிச்சை பெற்று வருபவர் ஆவார். இத்தகைய தீவிர நோயாளிகளுக்கு உரிய இதயப் பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனைகள் இன்றி, ஒரே நேரத்தில் 12 பற்களைப் பிடுங்கியது அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிகிச்சைக்குப் பின் வாய் முழுவதும் ரத்தம் வழிந்தபடி இருந்த முதியவரிடம், வீட்டிற்குச் செல்ல பஸ் கட்டணத்திற்கு வெறும் 30 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.421) மட்டுமே மிச்சம் வைத்து ஒட்டுமொத்தப் பணத்தையும் அந்த மருத்துவமனை உறிஞ்சியுள்ளது.

பாதிக்கப்பட்ட முதியவரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில், சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் லோக்கல் புலனாய்வுப் பிரிவினர் அந்த மருத்துவமனையில் சோதனைகளை மேற்கொண்டனர். அங்கு முறையான மருத்துவப் பதிவுகள் எதுவும் பராமரிக்கப்படாததும், கடுமையான விதிமீறல்கள் நடந்திருப்பதும் உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, முதியவரிடம் ஏமாற்றிப் பறித்த முழுப் பணத்தையும் உடனடியாகத் திருப்பித் தர உத்தரவிட்ட அதிகாரிகள், அந்தப் பல் மருத்துவமனையை நிரந்தரமாக மூடிச் சீல் வைத்தனர். இந்த விவகாரம் சீன ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பொதுமக்கள் இடையே மிகப்பெரிய  கொந்தளிப்பை ஏற்படுத்தியது.