அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் கடும் அவதி!

 
hospital hospital

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக வரும் ஏழை நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தினசரி பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். குடிநீர் வசதியின்மை, கழிவறைகளில் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் மின்தூக்கி பழுது போன்ற முக்கியக் காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் தங்களது கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மொத்தம் 5 தளங்கள் கொண்ட இந்த பெரிய மருத்துவமனையில் மின்தூக்கி இயங்காததால் முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். படுக்கையில் இருக்கும் நோயாளிகளை மேல் தளங்களுக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். இதுமட்டுமின்றி நோயாளிகளுக்குத் தேவையான உணவு மற்றும் உடைமைகளை எடுத்துச் செல்ல 5 மாடிகள் வரை ஏறி இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளின் உடல்நிலை மேலும் மோசமடையும் அபாயம் இருப்பதாகக் கூறி கவலை தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனையின் கழிவறைகளில் போதிய தண்ணீர் இல்லாததால் அங்குச் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் 5  தளங்களிலும் வைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரங்கள் கடந்த சில மாதங்களாக முற்றிலும் பழுதடைந்து கிடக்கின்றன. இதன் காரணமாக ஏழை நோயாளிகள் குடிநீரை வெளியில் விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அவசரப் பிரச்சினைகளில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.