திருமணமான 10 மாதங்களிலேயே பிரிந்த மனைவி... மனவேதனையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், திருமணமான 10 மாதங்களிலேயே மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் இருந்த இளைஞர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தயானந்தன் (28). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாகப் பணியாற்றி வந்தார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண்ணின் பெற்றோர் அவரைத் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தயானந்தன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை ரவி அளித்த புகாரின் பேரில், ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
