டெலிவரி ஊழியர் மீது தாக்குதல் நடத்திய ஹோட்டல் மேனேஜர்.. நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் பேரம் பேசுவதாகக் குற்றச்சாட்டு!

 
டெலிவரி டெலிவரி

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியர் ஒருவரை, பிரபல உணவக மேலாளர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு நீதி கிடைக்காமல் காவல் துறை காலம் கடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சோமன். இவர் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, சோமனுக்கு ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில் இருந்து ஆர்டர் ஒன்று வந்துள்ளது. உணவை வாங்குவதற்காக அவர் அந்த உணவகத்திற்குச் சென்று நீண்ட நேரம் காத்திருந்துள்ளார். ஆனால், அங்கிருந்த ஹோட்டல் மேலாளர் உணவைத் தயார் செய்து தராமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

வாடிக்கையாளருக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதால், உணவை ஏன் இவ்வளவு தாமதப்படுத்துகிறீர்கள் என்று சோமன் மேலாளரிடம் யதார்த்தமாகக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மேலாளர், எங்களை எதிர்த்துக் கேள்வி கேட்கிறாயா என்று கூறி, சோமனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, மிருகத்தனமாகத் தாக்கியுள்ளார்.

இந்த கொடூரத் தாக்குதலில் காயமடைந்த சோமன், உடனடியாகத் தன்னைத் தாக்கிய உணவக மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்யக் கோரி அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்தார். ஆனால், புகார் அளித்து தற்பொழுது ஒரு மாத காலம் கடந்த நிலையிலும், குற்றவாளியான அந்த உணவக மேலாளரை போலீஸார் இதுவரை கைது செய்யவில்லை என்று சோமன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட டெலிவரி ஊழியர் சோமன் கூறுகையில், "புகார் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, காவல் துறையினர் குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். வழக்கை முடித்துப் போவதற்காகவும், புகாரைத் திரும்பப் பெறுவதற்காகவும் என்னிடம் தொடர்ந்து பேரம் பேசி அழுத்தம் கொடுத்து வருகின்றனர்" என்று கண்ணீருடன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.