போலீஸ் கண் எதிரிலேயே ஓட்டலை அடித்து நொறுக்கிய கும்பல் - 'சிக்கன் ரைஸ்' தருவதில் தாமதம்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே ஓட்டலில் 'சிக்கன் ரைஸ்' வழங்குவதில் ஏற்பட்ட தகராறில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முன்னிலையிலேயே ஓட்டலைச் சூறையாடிய கும்பலைச் சேர்ந்த 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டியைச் சேர்ந்த 12 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவினர், திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பும் வழியில் எட்டயபுரம் அருகிலுள்ள சாலையோர ஓட்டல் ஒன்றில் சாப்பிட நிறுத்தியுள்ளனர்.
அந்த ஓட்டலில் குறைவான இருக்கைகளே இருந்த நிலையில், அவர்கள் சிக்கன் ரைஸ் மற்றும் புரோட்டா கேட்டு உடனடியாக வழங்கும்படி வற்புறுத்தியுள்ளனர். ஓட்டலில் போதிய உணவுகள் உடனே கிடைக்காது, தயார் செய்யச் சிறிது நேரமாகும் என ஊழியர்கள் கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பட்டேல் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றதுடன், எட்டயபுரம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். எனினும், அந்த கும்பல் போலீஸ் அதிகாரி முன்னிலையிலேயே ஓட்டலில் இருந்த மேஜைகள், நாற்காலிகள் மற்றும் பாத்திரங்களை அடித்து நொறுக்கிச் சூறையாடியது.
இத்தாக்குதலில் ஓட்டல் ஊழியர் தங்கதுரை (22) படுகாயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கம்மாபட்டியைச் சேர்ந்த அர்ஜூன் (30) உட்பட 10 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
