கேஸ் தட்டுப்பாட்டால் காலியான ஓட்டல்கள்.. கோயம்பேட்டில் காய்கறிகள் தேக்கம்... குஷியில் இல்லத்தரசிகள்; கவலையில விவசாயிகள்!
சர்வதேச அளவில் நிலவி வரும் ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம், இப்போது சென்னை மக்களின் உணவிலும், கோயம்பேடு காய்கறிச் சந்தையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. வணிக எரிவாயுதட்டுப்பாட்டால் உணவகங்கள் முடங்கியுள்ள நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கிலோ 10 ரூபாய்க்குச் சரிந்துள்ளது.
சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், காய்கறிகளின் தேவை குறைந்து கோயம்பேடு சந்தையில் 30 சதவீத விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவுக்கு வரும் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதால், பெரும்பாலான ஓட்டல்களில் உணவுகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. எரிவாயு இல்லாததால் பல சிறிய மற்றும் நடுத்தர உணவகங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்குவதை நிறுத்திவிட்டனர்.
விற்பனை மந்தமாக உள்ளதால், கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. அழுகும் பொருட்கள் என்பதால் வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர். தக்காளி, கத்தரிக்காய், கேரட், முட்டைக்கோஸ், சுரைக்காய் மற்றும் சௌசௌ ஆகியவை ஒரு கிலோ வெறும் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இதர காய்கறிகளின் விலை நிலவரம்: பெரிய வெங்காயம் (பல்லாரி) - ₹18, உருளைக்கிழங்கு - ₹18, சின்ன வெங்காயம் - ₹40, முருங்கைக்காய் - ₹30, பீன்ஸ் - ₹50, இஞ்சி - ₹55க்கு விற்பனை செய்யப்படுகிறது. "ஓட்டல்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களின் பயன்பாடு பாதியாகக் குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் காய்கறிகள் அனைத்தும் குப்பையில் கொட்டும் நிலை ஏற்படும். இதனால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது" எனச் சந்தை வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
