ஈரான்-அமெரிக்க மோதல்: எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், செங்கடலில் சென்று கொண்டிருந்த சவுதி அரேபியாவின் இரு பெரிய எண்ணெய் கப்பல்கள் மீது யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
செங்கடலில் உள்ள பாப் எல்-மந்தேப் ஜலசந்தி வழியே சவுதி அரேபியா தொடர்பான கப்பல்கள் செல்வதற்குத் தடை விதிப்பதாக அறிவித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தற்போது தங்களது முதல் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்: சவுதி அரேபியாவிற்குச் சொந்தமான 'என்சீலியா' மற்றும் 'லைலா' (Layla) ஆகிய இரு எண்ணெய் சுத்திகரிப்புக் கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலால் 'என்சீலியா' கப்பலின் முன்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், கப்பல் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் சவுதி போக்குவரத்துத் துறை உறுதி செய்துள்ளது.
மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவி வரும் போதிலும், சர்வதேச பொருளாதாரச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி வீழ்ச்சி பதிவாகியுள்ளது: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 3 சதவீதம் ($103) வரை குறைந்துள்ளது. அதேபோன்று வெள்ளியின் விலையும் 4 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
