மெரினாவில் திடீரென நிறுத்தப்பட்ட 2 ஹோவர்கிராஃப்ட்கள்! ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான 2 ஹோவர்கிராஃப்ட் ரோந்து வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கடலில் மட்டுமின்றி, ஆழம் குறைந்த நீர்ப்பகுதிகள் மற்றும் சேற்றுப் பகுதிகளிலும் இயங்கக்கூடிய இந்த வாகனங்களைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஹோவர்கிராஃப்ட்கள் அண்மையில் கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டன. அங்கிருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹால்டியாவில் உள்ள தங்களது தளத்தை நோக்கிப் புறப்பட்டபோது, பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
ஓய்வு மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்கள், தேவையான பணிகள் முடிந்ததும் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்து ஹால்டியாவைச் சென்றடைய உள்ளன. கடலோரக் கண்காணிப்பு, கடத்தல் தடுப்பு, கடலில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்ட பணிகளில் ஹோவர்கிராஃப்ட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
