"எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டார்.." - அண்ணாமலை உருக்கம்!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் இழுபறிகளையும், அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நிலையையும் விமர்சித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்குக் குறைந்த இடங்களே ஒதுக்கப்படுவதால் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்தார். குறிப்பாக வைகோ குறித்துப் பேசுகையில், "வைகோ அவர்களைப் பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. ஒரு காலத்தில் சிங்கம் போல கர்ஜித்தவர், எப்படி இருந்தவர் இன்று இப்படி ஆகிவிட்டார்? தொகுதிப் பங்கீட்டின் போது திமுக மேலிடம் கொடுக்கும் சொற்ப இடங்களை வாங்கிக் கொண்டு, கஷ்டப்பட்டுச் சிரிக்கும் அவரது நிலை வேதனையளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே நிலவும் இடப்பகிர்வு குறித்த மோதலையும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார். விசிக தலைவர் திருமாவளவன் இம்முறை 5 அல்லது 6 இடங்களுக்குக் குறைவாக எதற்கும் ஒத்துக்கொள்ள மாட்டார் என்றும், இடதுசாரி கட்சிகள் தங்களுக்குரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் இன்று திமுக கூட்டணி நடத்தி வரும் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த போராட்டத்தையும் அண்ணாமலை விமர்சித்தார். "எரிபொருள் தட்டுப்பாடு என்று கூறி திமுக கூட்டணிதான் மக்களிடையே பீதியைக் கிளப்புகிறது."

"மத்திய அரசின் வெளியுறவுத் துறை ராஜதந்திரத்தால் ஈரானில் சிக்கிய இரண்டு இந்தியக் கப்பல்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. பெட்ரோல் விலை உயர்வு என்பது உலகளாவிய பிரச்சனை, ஆனால் தமிழகத்தில் மட்டுமே மக்கள் கேன்களுடன் பெட்ரோல் பங்குகளில் நிற்பது போன்ற ஒரு தோற்றத்தை திமுக உருவாக்குகிறது."
தமிழகத்தில் பாஜக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், தொகுதிப் பங்கீட்டிற்காகத் தாங்கள் யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை என்றும் அண்ணாமலை கூறினார். மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பிரதமர் நரேந்திர மோடி இன்னும் இரண்டு அல்லது மூன்று முறை தமிழகம் வரவிருப்பதாகவும் அவர் உற்சாகத்துடன் தெரிவித்தார்.
