"எத்தனை வழக்குகளைத்தான் தாக்கல் செய்வீங்க?" - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி!

 
உச்சநீதிமன்றம்

காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு உரிய நீரைத் திறந்துவிட உத்தரவிடக் கோரித் தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு இடைக்கால மனுக்களைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், புதிய மனு தாக்கல் செய்தது தொடர்பாகத் தமிழக அரசுக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அக்டோபர் 24 முதல் 27 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 12,000 கன அடி நீருக்குப் பதிலாக 8,149 கன அடி நீர் மட்டுமே பெறப்பட்டது. அதே நேரத்தில் கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளில் 52.189 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது.

கர்நாடக அரசு தொடர்ந்து காவிரி நீரைத் திறக்க மறுப்பதால் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடக அரசு இவ்வாறு வஞ்சித்தால் தமிழக விவசாயிகள் எவ்வாறு சாகுபடி மேற்கொள்ள முடியும் என்றும் தமிழக அரசு தனது மனுவில் வேதனை தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றம்

கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற்றுத் தரக் கோரித் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு இடைக்கால மனுக்களை நிராகரித்து நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

விசாரணையின்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உமாபதி, அக்டோபர் 23-ஆம் தேதி ஆணையம் பிறப்பித்த உத்தரவின்படி தினமும் வினாடிக்கு 3,000 கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்காதது தொடர்பாகப் புதிதாக ஒரு இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள் அதிருப்தி அடைந்து, "காவிரி நீர் விவகாரத்தில் எத்தனை மனுக்களைத்தான் தாக்கல் செய்வீர்கள்? எத்தனை மனுக்கள் வந்தாலும் தற்போது அவற்றைத் தள்ளுபடி செய்யப் போகிறோம்" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினர்.

மேகதாது

நீதிபதிகளின் கருத்தைத் தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதி, புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகளை முழுமையாகப் பரிசீலித்து அதன் பிறகே முடிவெடுக்க வேண்டும் என்றும், எனவே விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், புதிய இடைக்கால மனு மீதான விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். காவிரி டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் இன்றி விவசாயிகள் தவித்து வரும் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.